“பாரீஸ் கபே” திரைப்பட விமர்சனம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில், சராஸ் சீலன் இயக்கத்தில், குருசோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா குமார், சாய் விக்கி, நயனா சாய், பிபின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பாரீஸ் கபே”. குருசோமசுந்தரம் நேர்மையான மருத்துவர். அவரது மனைவி அனுமோல், மகள் அர்ச்சனா வெளிநாட்டில் இருக்கிறார். அவளது காதலன் விஜய் விஷ்வா. தாய் தந்தை மீது மிகவும் பாசம் கொண்ட அர்ச்சனா,  வெளிநாட்டிலிருந்து தனது தந்தை குருசோமசுந்தரத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கிறார். பிறகு போனை அம்மாவிடம் கொடுக்க சொல்கிறாள். அதற்கு குருசோமசுந்தரம் “அம்மா இப்போது வீட்டில் இல்லை. என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு அவளது அம்மா வீட்டுக்கு போய்விட்டாள்” என்று கூறுகிறார். அம்மா அனுமோலை சமாதானப்படுத்தி மீண்டும் அப்பாவுடன் ஒன்று சேர்க்க, தன் காதலன் விஜய் விஷ்வாவுடன் சென்னைக்கு வருகிறார்கள். எதற்காக குருசோமசுந்தரமும் அனுமோலும் பிரிந்தார்கள். மகள் அர்ச்சனாவின் முயற்சியால் குருசோமசுந்தரமும் அனுமோலும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

குடும்பத்திற்காக பிரச்னையிலிருந்து ஒதுங்குவதும், அதே குடும்பத்திற்காக மீண்டும் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதுமாக குரு சோமசுந்தரம் சிறப்பாக நடித்திருக்கிறார். தனக்கே உரித்தான அமைதியான குணத்துடன் ஒரு மருத்துவராகவே திரையில் வாழ்ந்திருக்கிறார் குருசோமுந்தரம். சமுதாய சீர்திருத்தவாதியாக அனுமோல் திரையில் பிரகாசிக்கிறார். ஆணவக் கொலைக்கு எதிராகவும், அரசியல்வாதிகளின் அச்சுறுத்துதல்களுக்கு அடிபணியாமல் களம் காணும் காட்சிகளில் அனுமோலும் அர்ச்சனாவும் அசத்துகிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக குருசோமசுந்தரமும் விஜய் விஷ்வாவும் கைகோர்த்து நிற்கும் காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. ஆரவாரம் இல்லாத அமைதிப் போராட்டமாக அனைவரும் நடித்துள்ளார்கள். சமுதாயத்துக்காக உச்சக்கட்ட காட்சியை அமைதி பூங்காவைபோல் அலங்கரித்திருக்கிறார் இயக்குநர் சராஸ் சீலன். அடாவடித்தனம் இல்லாத ஒரு அழகான அதே நேரத்தில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு காவிய படைப்பு “பாரீஸ் கபே”. சந்தேஷின் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.