விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படம் அக்.1ல் வெளியீடு

ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் “பத்தா” திரைபடத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசையும் தற்போது வெளியாகியுள்ளது.  இந்நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:  “பாலாஜி தரணீதரனை எனக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகத் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒரு பக்கக் கதை’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட அவருடைய படங்களைப் பாருங்கள். இத்தனை ஆண்டுகளாக ஒரு மனிதர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் மரியாதையையும் இழக்காமல் இருப்பது பெரிய விஷயம். யாராவது தன்னைப் பாதித்திருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாகப் பேசாத ஒரு நல்ல மனிதர். அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது. அவர் ஒரு அழகான மனிதர். பாலாஜி மாதிரியான ஒருவரால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு நெருக்கமான நண்பர் எனக்கு இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.”*********

“லிஜோமோல் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் அவருடைய நடிப்பை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திரையில் பார்த்தபோது, நாங்கள் கணவன்-மனைவியாக வாழும் அந்த வாழ்க்கை, வீடு, குழந்தை என அந்த உலகத்துக்குள் அவர் முழுமையாகச் சென்றிருந்தது தெரிந்தது. வீட்டில் இருக்கும் ஒருவரைப் போல அந்த இடத்தையும், பொருட்களையும் அவர் பயன்படுத்திய விதம் மிகவும் இயல்பாக இருந்தது. அதை எப்படி அவர் செய்தார் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. லிஜோ, உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதேபோல் சாய் அபயங்கர் இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் வேறொரு உயரத்துக்கு சென்றிருக்கிறார். அவருடைய இசை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். அதே போல் அந்த சின்னப்பையன் ஆவன், கலக்கியிருக்கிறான். சகஸ்ரா இந்தக் கதையைத் தாங்கிச் செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். ஆறு, எட்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த அந்தக் குழந்தை இப்போது எவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான்.”

“இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். ஒரு பக்கம் விருதுகளைப் பெறும் படம், இன்னொரு பக்கம் மிகப்பெரிய வசூலைப் பெறும் படம் என்று இரண்டையும் எப்படி ஒரே படத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்ற கேள்வியும் இருக்கலாம். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘பத்தா’ பதில் சொல்லும் என்று நான் நம்புகிறேன். ஒரு வீரனும், ஒரு அறிவாளியும் சந்தித்தால் அவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் ஒரு வீரனோ, அறிவாளியோ ஒரு அப்பாவியான மனிதனைச் சந்திக்கும்போது நடக்கும் மாயம் வேறொரு விதமானது. அந்த அப்பாவித்தனத்துக்குள் இருக்கும் அறிவை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது. அந்த உணர்வுதான் இந்தப் படத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். விஷ்ணு, பாலா, ஹரிஷ், அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ரசிப்பீர்கள்.

படத்தைப் பார்த்து முடித்த பிறகு சபரி எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒருவர் நம்முடைய படத்தை நம்புகிறார் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று நானும் முழுமையாக நம்புகிறேன். செல்வா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள், படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றி. யாருடைய பெயரையாவது சொல்லத் தவறியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். எல்லாரையும் திரையரங்கில் சந்திப்போம். இந்தப் படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.”