“கும்கி 2” திரைப்பட விமர்சனம்

தவல் காடா தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் மதி, ஷ்ரிதா ராவ், அர்ஜூன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரடி, ஶ்ரீநாத் ஆக்யோர் நடித்திருக்கும் படம் “கும்கி 2”.  ஒரு மலைகிராமத்தில் ஒரு குட்டியாணை பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடுகிறது. அந்த வழியாக வந்த மாணவன் பள்ளத்தில் இறங்கி தோள் கொடுத்து தூக்கிவிட்டு அந்த குட்டியானையை காப்பாற்றுகிறான். அதுமுதல் அந்த யானைக்குட்டியும் சிறுவயது மதியும் அண்ணன் தம்பியாக வாழ்ந்து வருகிறார்கள். பணத்தாசைப்பிடித்த மதியின் பெற்றோர்கள் மதிக்கு தெரியாமல் அந்த யானையை பலி கொடுக்க ஒருகோடி ரூபாய்க்கு தரகர் அர்ஜூன் தாஸ் மூலம் அரசியல்வாதிக்கு விற்றுவிடுகிறார். அந்த யானையை யாருக்கும் தெரியாமல் மதி கடத்திவந்துவிடுகிறார். அந்த யானையை காவல்த்துறை ஆய்வாளர் ஹரிஷ் பெரடியும் தரகர் அர்ஜூன் தாஸ்சும் தேடி வருகிறார்கள். அவர்களின் கையில் யானை சிக்கியதா? இல்லையா? அரசியல்வாதி யானையை பலி கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. பறவைகளும் மிருகங்களும் மனிதர்கள் போன்றே தனித்தனி சமுதாயங்கள்தான். மனிதர்களைப்போன்றே அவைகளுக்குள்ளும் பாச உணர்வுகள் ஏற்படும் என்பதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். நன்றி செலுத்துவதில் மனிதர்களைவிட, மிருக இனங்கள்தான் மேலானவைகள். காரணம் அவைகள் தன் தேவைக்கு மட்டுமே வாழும். ஆனால் மனிதர்கள் தன் தேவைக்கு மேலும் வேண்டுமென்று வாழ்பவர்கள் என்பதை திரையில் பிரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். புதுமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார் மதி. கோபத்தின் உச்சத்தையும்  பாசத்தின் பரிவையும் சந்தோஷத்தின் துள்ளலாட்டத்தையும்  திரையில் கொட்டி நடித்திருக்கிறார் மதி.  இனிப்பு கொடுத்தே கொல்லும் வில்லத்தனத்தின் வித்தையை அழகாக கையாண்டு இருக்கிறார் அர்ஜூன் தாஸ்.  சோர்வடையும் பார்வையாளர்களுக்கு அவ்வப்போது கிச்சுகிச்சுமூட்டி விளையாடியிருக்கிறார் ஹரிஸ் பெர்டி. படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர் எம். சுகுமாரும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவும் வெகுவாக உழைத்திருக்கிறார்கள். ஒலிப் பொறியாளராக வரும் ஷிரிதா ராவ் ஒருசில காட்சிகளே வந்தாலும் கதையின் திருப்புமுனைக்கு அவரின் கதாபாத்திரம்தான் பேசுகிறது. ஓடும் தேரின் சக்கரத்திற்கு முட்டுக் கொடுத்து திருப்பிவிடுவதுபோல இயல்பாக நடித்து பாராட்டை பெறுகிறார். பாசத்திற்கு பட்டமளிப்பு விழா நடத்துகிறது “கும்கி 2”.