சென்னையில் கிராமத்து பொங்கல் விழா

தங்கமுகையதீன்

நிழற்படங்கள்: அரிதாரக் கலைஞர் சித்தைய்யா
———————

பல்லாயிர ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர்களின் குறிப்பாக உழவர்களின் திருவிழாவான பொங்கல் திருவிழா, கிராமங்களில்தான் பழைமை மாறாமல் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது உழவுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா.

சூரிய உதயத்திற்கு முன்பாகவே தங்களது வீட்டு வாசலில் நீர் தெளித்து பச்சையரிசி மாவில் கோலம் போட்டு புது மண்பானையில் பாலூற்றி விறகை எரித்து பாலை பொங்க வைப்பார்கள். பால் பொங்கியதும் பச்சையரிசியை பாலில் கொட்டி  சோறாக்கி சூரியனுக்கு படைப்பார்கள்.

அதே நேரத்தில் பக்கத்தில் வேரொரு பானையயும் வைத்து பாலை பொங்கவைத்து அதில்  பச்சரிசியுடன் வெல்லத்தையும் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் தயாரித்து படைப்பார்கள். இது தமிழனின் நன்றி மறவாத குணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததுதான் பொங்கல் திருவிழா. மறுநாள் உழவுக்கு ஒறுதுணையாக இருந்த மாடுகளுக்கும் விழா எடுத்து தங்களது நன்றியை மாட்டுக்கும் தெரிவிப்பார்கள். மறுநாள் காணும் பொங்கல் என்ற பெயரில் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தங்களது மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் பழைய மரபுபடி பொங்கல் வைக்கும் பழக்கம் நகர்புறங்களில் காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. குறிப்பாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் வீட்டுக்கு வெளியே வந்து பொங்கல் வைப்பதில்லை. மாறாக சமையலறையிலேயே எரிவாய்வுலேயே உலோக்ப்பானையில் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இவ்வருட பொங்கலை கிராமத்தில் நடப்பதுபோல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 

தமிழக் முதல்வர் மு.க.ஸ்டாலின் பறையடித்து பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள குரோம்பேட்டை நடேசன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் லட்சுமி நாராயணன், செய்லாளர் சீனிவாசன், உதவித் தலைவர் கமால் அப்துல் நாசர், இணைச் செயலாளர் சித்தைய்யா, பொருளாளர் பிராங் லின் ஆகியோர் கிராமத்தில் நடக்கும் பாரம்பரிய முறைப்படி பொங்கலை சென்னையில் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதன் படி ஒவ்வோரு வீட்டு வாசலிலும் மாக்கோலம் போட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கும் மாட்டுக்கும் நன்றி தெரிவித்தார்கள். அழகான முறையில் கோலம் போட்டவர்களுக்கு பரிசுகள் வழங்க, கமால் அப்துல் நாசர், ராமகிருஷ்ணன், முனியாண்டி, டாக்டர்.பிரபு மற்றும் ரேவதி ஆகியோர் நீதிபதிகளாக இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

அத்துடன் இல்லாமல் விழாவன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம் ஆகியவைகளும் நடைபெற்றது. சிறுவர்களை ஊக்கப்படுத்த அவர்களுக்கும் படம் வரைதல், மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பெரியவர்களுக்கான இசை நார்காலி போட்டி, உறியடித்தல் போட்டி ஆகிய அனைத்து விதமான் தமிழர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள்.