அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார்.******
படத்தின் நாயகன் அசோக் செல்வன் பேசும்போது,* “இது மகிழ்ச்சியான விழா இதில் பேசுவதற்காக எதுவும் தயாரித்துக் கொண்டு வரவில்லை .அந்த அளவுக்கு சென்சார் தொடங்கிப் பட வேலைகள் இருந்து கொண்டே இருந்தன. நான் நடித்து படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. ஒரு திரைப்படம் என்பது ஏதோ செய்துவிட்டுச் செல்வதல்ல. சினிமா என்றால் நான் நினைப்பேன் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட படத்தில் தான் நான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல கதைகள், நல்ல கதா பாத்திரம் பார்த்து நடிக்க வேண்டும். அனைத்தும் இதில் தேர்ந்தெடுத்து செய்தோம்.இந்தப் படத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல அனுபவங்களைக் கற்றுக் கொண்டோம்.
நான் இந்த விழாவுக்குக் கூப்பிட்ட அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .ஏதோ ஒரு முயற்சி செய்ய வேண்டும் மக்களிடம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம் எனது உழைப்பு அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.அதற்கான மறு கண்டுபிடிப்பு மறு தேடல் செய்ய வேண்டும்.
இந்த முக்கியமான படம் கொடுத்ததற்கு முதலில் என் அக்காவிற்கு நன்றி. மூன்று நான்கு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார்.பல கடினமான விஷயங்களைக் கடந்து இருக்கிறார். பல சிரமங்களை நான் கடப்பதற்கு அவர்தான் காரணம். எனக்கு அக்கா பலமும் அண்ணன் பலமுமாக அவர் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பலரும் மாறி விடுவார்கள் .ஆனால் என் அக்கா அப்படியே இருக்கிறார். அப்பா அம்மாவுக்கு நன்றி. படத்தின் பட்ஜெட் தாண்டிய போது செலவு அதிகமாகும் வீடு அடமானம் வைப்பதற்காக பத்திரத்தைக் கேட்டபோது அவர்கள் தயங்காமல் கொடுத்தார்கள். மகன் ஏதோ செய்கிறான் என்று அவனது கனவுக்காக ஆதரவு கொடுத்தார்கள்.
இயக்குநரும் நானும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம்.என் படத்தில் அறிமுகமானவர்கள் இன்று பெரிய படங்களை இயக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விக்னேஷ் ராஜா தனுஷ் படத்திலும் அஸ்வத், ரஜினி சார் படத்திலும் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு பேரும் வளர வாழ்த்துக்கள்.இங்கே வந்திருக்கும் கௌதம் கார்த்திக் என் தம்பி. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .எடிட்டர் செல்வாவும் நானும் கல்லூரிக் காலத்திலிருந்து நண்பர்கள். அவர் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்
பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியது அவர் தான். பெரிய படங்களில் தொடர்ந்து பணியாற்றுபவர் இது மாதிரி சின்ன படத்திற்கு பணியாற்றுவாரா என்று சந்தேகமாக இருந்தது.ஆனால் அவர் சிறந்த வகையில் உருவாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் கௌதம் நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன் எங்கள் படத்தில் நடித்த போது அவரது ஒரு படம் தான் வந்திருந்தது. அவர் நான் முதலீடு செய்துள்ள பிட்காயின் என்று சொல்வேன். இப்போது நான் கல்லூரி விழாக்களுக்கு எங்கு சென்றாலும் ப்ரீத்தி முகுந்தனைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று கத்துகிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கலாம்.
சபு சேட்டன் எங்களுக்கு படப்பிடிப்பில் பிரட் சப்ளை செய்தார். அங்கே ஒரு ஸ்டாலே போட்டு எங்களுக்கெல்லாம் கொடுத்தார். நான் நூறு இருநூறு ஆடிஷன் போயிருப்பேன்.இந்தப் படத்திலும் அப்படி ஆடிஷன் வைத்து தான் தேர்ந்தெடுத்தோம் .அப்படி ஒரு தங்கம் போல மகா, கதிர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்கள் பெரிய இடத்துக்கு செல்வார்கள். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக இருக்கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தில் ஐங்கரன் இண்டர் நேஷனல் இணைந்த போது கருணாமூர்த்தி சார் ஒன்று கூறினார். அவர் கதையை மட்டும் கேட்டார். மற்றபடி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. எனது மனைவி கீர்த்திக்கு நன்றி.”என்றார்.

