ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் அவியட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் நடிகர் பிரபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.********
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். வான்கோ போஸ்டர் வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். மேலும் இப்படத்தில் DC படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.
இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் பேசியதாவது:“முதலில் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வரவேற்பும் நன்றியும். ராகுல் என்னிடம் இந்த ப்ராஜெக்ட் குறித்து பேசியபோது, அவரிடம் நான் சொன்ன ஐடியா அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை நாமே செய்யலாம் என முடிவு செய்தோம். இப்போது அந்தப் படத்தை சிறப்பாக டேக்-ஆஃப் செய்திருக்கிறோம். இனி இதை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். பிரபு சாரை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று ராகுல்தான் முதலில் சொன்னார். எனக்கும் அதில் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
தமிழ் சினிமாவில் அவருக்கென்று இருக்கும் தனித்துவமான நடிப்பு பாணியை வைத்து, இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான அணுகுமுறையில் அவரை இந்தப் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதையை அவரிடம் சொன்னபோது, அவர் மிகவும் ஆர்வமாகக் கேட்டு ரசித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதை ரசித்து, ‘இந்தப் படம் பண்ணலாம்’ என்று சொன்னது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
இந்தக் கதையில் பிரபு சார் நடிக்க ஒப்புக்கொண்டது எங்களுக்கு மிகப்பெரிய பலம். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படத்தின் தொடக்க நிகழ்வுக்கு வந்து எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக பா. ரஞ்சித் அண்ணன், அருண் மாதேஸ்வரன் சார், நீங்கள் வந்ததற்கு மிக்க நன்றி. இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரின் ஆதரவுடனும் இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்குவோம். அனைவருக்கும் நன்றி.”

