அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை இயக்குநர் பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள் மற்றும் திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவமனைத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் பணிகளில் அவர் கவனம் செலுத்த உள்ளார். புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான பகுதிகளில் ஒரே மாதிரியான வடிவமைப்புத் தர நிலைகளை உருவாக்குதல் ஆகியவை அவரது முக்கியப் பொறுப்புகளாக இருக்கும்.
இதுகுறித்து உபாசனா காமினேனி கொனிடெலா கூறுகையில்: “எனது தாத்தா டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகள் இந்திய மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அப்போலோவை உருவாக்கினார். அவர் கொண்டிருந்த அந்த நம்பிக்கையை நாம் உருவாக்கும் புதிய மருத்துவமனைகளிலும், மேம்படுத்தும் மருத்துவ வசதிகளிலும் தொடர்ந்து கொண்டு செல்வதே எனது பொறுப்பு.
ஒரு மருத்துவமனையின் சிறந்த வடிவமைப்பு என்பது மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். நோயாளிகள் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் தங்களுக்குத் தேவையான இடத்தை எளிதில் கண்டறிய வேண்டும். குடும்பத்தினர் ஆதரவுடன் இருப்பதாக உணர வேண்டும். அதே நேரத்தில், மருத்துவர்கள் மற்றும் சிகிச்சைக் குழுவினர் சிறப்பான மருத்துவச் சேவையை வழங்குவதற்கு உதவும் வகையில் மருத்துவமனையின் இடவசதிகள் அமைக்கப்பட வேண்டும்.
அப்போலோ தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு திட்டமும் அந்தப் பகுதி மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். எங்களுடன் பணியாற்றும் மக்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், மக்கள் தங்களது உடல்நலத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள உதவ வேண்டும்.
சிந்தனைமிக்க வடிவமைப்பு, அக்கறையுடன் வழங்கப்படும் மருத்துவச் சேவை மற்றும் இந்தியாவின் மருத்துவத் துறையின் சிறப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து உலகிற்கு நாம் என்ன சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு உள்ளது.” என்றார்.

