இன்சோம்னியாகஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மனோ வெ. கண்ணதாசன் இயக்கத்தில், ‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் பதாகை வெளியாகியுள்ளது. முந்தைய படத்தின் மூலம் நேர்த்தியான மர்மம் மற்றும் அதிரடி திருப்பம் உள்ள கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்திலும் பரபரப்பான கதைக் களத்தை கையில் எடுத்துள்ளார். இந்த பதாகையில் ரத்த வெள்ளத்தில் தலைகீழாக கிடக்கும் பெண், அவரைச் சுற்றி சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்களுடன், அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிற கார் என மர்மத்தையும் பதற்றத்தையும் ஒரே பார்வையில் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்ணைச் சுற்றி பரவியிருக்கும் ரத்தம் காரின் பாதையாக நீளும் காட்சி, இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கதையின் விசாரணைத் தன்மையையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.********
‘இறுதிபக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், படம் ஒரு புதிய ரத்தம் தோய்ந்த மர்மம் மற்றும் பரபரப்பான திரில்லர் களத்தை கையில் எடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இறுதிப்பக்கம்’ திரைப்படம் மர்மம், விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய எமோஷனல் திரில்லராக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் அடுத்த பாகமான ‘இறுதிப்பக்கம் 2’வும் அதேபோன்று பரபரப்பான திரில்லர் களத்தில் உருவாகியுள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக மட்டுமின்றி, புதிய கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் மையக் கதையில் ஒரு கொலை நடைபெறுகிறது. அந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு தரப்பு தீவிரமாகத் தேடுகிறது. அதே நேரத்தில், கொலையைச் செய்தவர்கள் தங்களுடைய குற்றம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக அதை மறைக்க மற்றொரு தரப்பு முயற்சி செய்கிறது. இவ்வாறு, கொலையை கண்டுபிடிக்க முயலும் ஒரு தரப்புக்கும், அதை மறைக்க முயலும் மற்றொரு தரப்புக்கும் இடையே நடைபெறும் ஆடு–புலி ஆட்டமே இப்படத்தின் திரில்லர் பயணமாக அமைந்துள்ளது.

