இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து ஒரு திரைப்படம் தயாரிக்க எடுத்த முயற்சி, தற்போது அடுத்த முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்ரீ கார்த்திக் இயக்கவுள்ள இந்த புதிய திரைப்படத்தை ‘மேட்பாய்ஸ் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘சிறுனி சினி கார்ப்பரேஷன்’ தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தொடங்குவதில் உள்ள சவால்கள், சரியான கதையைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சிரமங்கள், நிராகரிப்புகள், அதை தாண்டி தாங்கள் நம்பிய கதையை கண்டறிந்து அதை சொந்த முயற்சியில் உருவாக்க அவர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் என அனைத்தையும் ரீல்ஸ் மூலமாக ஆவணப்படுத்தி வந்தனர். தற்போது இந்த நெகிழ்ச்சியான பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனம் இவர்களுடன் இணைந்துள்ளது.******
அமலா அக்கினேனி, சர்வானந்த், ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘கணம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீ கார்த்திக், அறிவியல் புனைகதையையும் (Sci-Fi) குடும்ப உணர்வுகளையும் அழகாகக் கலந்து, தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை பதித்தவர். அவரது அடுத்த படைப்பில் தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்தியநாதன் ஆகியோரின் கூட்டு பங்களிப்பும் இணைந்துள்ளது.
தேவ் ராம்நாத் மற்றும் ஸ்ரீ கார்த்திக் தலைமையிலான ‘மேட்பாய்ஸ் என்டர்டெயின்மெண்ட்’, “I hate you I love you” மற்றும் “Childhood Diaries” போன்ற புகழ்பெற்ற இணையத் தொடர்கள் (Web Series) மற்றும் குறும்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிறுவனம் ஆகும்.
தற்போது இந்நிறுவனம் இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது முதல் தயாரிப்பில் அடியெடுத்து வைக்கிறது. தேசிய விருது பெற்ற ‘சி ல சௌ’ (Chi La Sow) திரைப்படத்தை தயாரித்த ‘சிறுனி சினி கார்ப்பரேஷன்’ நிறுவனம், இணைதயாரிப்பாளராக இதில் கை கோர்த்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. மூன்று நண்பர்களின் திரை கனவாக தொடங்கிய இந்த பயணம், தற்போது வலுவான கூட்டணியுடன் வெற்றிகரமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது.

