‘அரிக்கொம்பன்’ திரைப்படம் டிச.11-ல் வெளியீடு!

மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன். மிதுன் மகேஷ்வரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.  தேவகி கிருஷ்ணன் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அப்பு குட்டி ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காணொளி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விக்  இயக்குனர் மற்றும் நடிகர் மீதுன் மகேஸ்வரன் பேசும்போது, “நடிகராகத் திரையுலகில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசையுடன் வந்த எனக்கு, இன்று இயக்குநராகவும் இந்த மேடையில் நிற்பது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அதே நேரத்தில், இந்தப் பயணம் மனதளவில் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இப்படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, இயக்குநராகப் பணியாற்றிய முன் அனுபவம் எதுவும் எனக்குக் கிடையாது. இதுவரை எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. நான் நடித்த திரைப்படங்களின் அனுபவங்களையே அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கினேன். நான் பணியாற்றிய அனைத்து திரைப்படங்களின் இயக்குநர்களையும் எனது குருவாகவே கருதுகிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களே இப்படத்தை உருவாக்குவதற்குப் பெரிதும் உதவின.********

‘அரிகொம்பன்’ திரைப்படம் 1980-ஆம் ஆண்டின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தை உருவாக்குவதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளோம். குறிப்பாக, படத்தில் இடம்பெறும் காட்டுப் பகுதி முழுவதும் அரங்குகளாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்கள், குளம் உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் அனைத்து இடங்களையும் கலை இயக்குநர் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இதற்காகச் சுமார் ஆறு மாதங்கள் உழைத்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யானை தொடர்பான காட்சிகளையும் அவரே உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் எங்களைவிட அதிக நேரம் செலவிட்டு உழைத்தவர் அவர்தான். அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.

இப்படத்தின் இசையமைப்பாளர் சாகிஷ்ணா சேவியர் எனது நீண்டகால நண்பர். அவரைப் பற்றிப் பேசுவதற்கு வார்த்தைகள் போதாது. இப்படத்தின் பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். படத்தைப் பார்க்கும்போது அவரது பின்னணி இசையின் வலிமையை ரசிகர்கள் உணர்வார்கள். அது படத்திற்கு யானை பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அனீஷ் லால் கேரளத் திரையுலகில் சுமார் 15 முதல் 16 திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது அவருடைய முதல் தமிழ்த் திரைப்படம். கதையைக் கேட்டவுடன் இப்படத்தில் பணியாற்ற ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். சாகிஷ்ணா சேவியர் மற்றும் அனீஷ் லால் ஆகிய இருவரும் தங்களது முழுமையான உழைப்பை வழங்கி, இப்படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். ஒரு கதையைத் தாளில் எழுதுவது எளிது. ஆனால், அதனைத் திரையில் காட்சிகளாக மாற்றி, ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவால். அந்தப் பணியை இருவரும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் நடித்த மூத்த நடிகர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின்போது பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்தன. காட்டுப் பகுதியிலேயே அனைவரும் ஒன்றாக வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் என்றும் மறக்க முடியாததாக இருக்கும். படத்தில் பங்களித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நேரம் கருதி எனது உரையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். ‘அரிகொம்பன்’ திரைப்படம் நிச்சயம் வெற்றிகரமான படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்றார்.