ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்..*******
இயக்குநர் S J N அலெக்ஸ் பாண்டியன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற பெயர் வைத்து விட்டு படத்தின் பணிகள் தொடங்கி இதுவரையிலான பயணம் என்பது விமானத்தின் மேற்கூரை பகுதியில் அமர்ந்து பயணிப்பது போன்றதொரு பயணமாக எனக்கு இருந்தது. இரண்டு ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறோம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் தங்கமானவர்கள்.
தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி உலக புகழ்பெற்ற ஸ்தபதி. அவருக்கும் இந்த துறைக்கும் தொடர்பே இல்லை. அவரை இத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர்கள் எங்களை கொண்டாடுவார்கள்.
தயாரிப்பாளர் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார். அதேபோல் இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பனும் பிரச்சனை என்று அவரிடம் செல்லும்போது எல்லாம் அவரும் பணம் கொடுத்து உதவினார். இருந்தாலும் இந்த திரைப்படத்தை உருவாக்கி இந்த நிலைக்கு எடுத்து வருவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஏனெனில் தமிழ் சினிமா அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறது.
புதுமுகமாக இருக்கும் கௌஷிக் ராமை தேர்வு செய்தேன். அவரும் எங்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
பிரதீபா அவர்களிடம் கதையை சொன்ன போது கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார். அத்துடன் சம்பளம் எனக்கு முக்கியமில்லை. கதை நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டி கிடக்கிறது. அவரும் எதிர்காலத்தில் மிகப்பெரும் கதாநாயகியாக வருவார்கள். அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி நான் பார்க்கும் போது அவருக்கு 15,16 வயது தான் இருக்கும். அப்போதே அவர் 40 குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுதுதல் குறித்த பயிற்சி பெற்றேன். என்னுடைய திட்டமே தாமதமாக இயக்குநராக வேண்டும் என்பதுதான்.
இப்படத்தின் இருபது நிமிட காட்சிகளை செல்போனில் தான் எனது நண்பரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான கார்த்திக் வீரப்பனிடம் காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு எமோஷனலாகி இப்படத்திற்கு தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக மதுரையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வை மிக சிறப்பாக நடத்திக் காட்டினார். தொடர்ந்து நேரு கல்லூரியிலும் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்திக் காட்டினார். அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

