கலைமாமணி மதுரை ஆர்.முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர்’ மேடை நிகழ்ச்சி இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7ல் அரங்கேறுகிறது. இந்நிகழ்வில் இயக்குநர் கே.பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.******
இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

