“எங்கள் தங்கம்” திரைப்படம் ஜூன் 19ல் வெளியீடு

ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள “எங்கள் தங்கம்” திரைப்படம் ஜூன் 19ல் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகை சமந்தா பேசியதாவது:  ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.*******

இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.