‘டூரிஸ்ட் ஃபேமிலி’ 6 சைமா விருதுகளை வென்றது

தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.********

சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம். நகைச்சுவை, குடும்ப உணர்வு, மனிதநேயம் என பல்வேறு அம்சங்களை அழகாக இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படத்தின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தற்போது சைமா விருதுகளில் விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர்,  சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் என மொத்தம் 6 விருதுகளை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வென்றுள்ளது.