அண்மையில் வெளியான துப்பறிதழ் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன், பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிட்சியே வரவேற்பு பெற்றுவருகிறது. இதுபற்றி அப்படத்தின் கதாநாயகன் சித்து கூறியதாவது: “இந்தத் தருணத்திற்காக நான் பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். சாலிக்கிராமத்தில் தசரதபுரத்தில் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு தான் சினிமா வாய்ப்பு தேடினேன். எல்லா கம்பெனிகளுக்கும் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டு சென்று அலைந்திருக்கிறேன். அது ஒரு பெரிய தேடல். அப்போது இதில் நிறைய பசி, அவமானம் போன்றவற்றைச் சந்தித்து இருக்கிறேன். நிறைய இடத்தில் போட்டோக்களைக் கொடுத்துவிட்டு உதவி இயக்குநரிடம் இருந்து நாளைக்கு ஓர் அழைப்பு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் உண்டு. சினிமாவை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ.அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் ********
திரையரங்கு சென்று படம் பார்க்கும்போது நம்முடன் வாய்ப்பு கேட்டவர்கள் எல்லாம் நடித்துப் பெரிய ஆளாகி ஹவுஸ் ஃபுல்லாக படங்கள் ஓடியதையும் பார்த்திருக்கிறேன். அப்போது மகிழ்ச்சியாக இருக்கும்.பொறாமை இருக்காது. ஆனால் மனதில் ஒரு பக்கம் சிறு வருத்தமும் ஏக்கமும் இருக்கும். நமக்கான நாள் என்று வரும்? நமக்கான வாய்ப்பு என்று வரும்? என்று ஒரு ஏக்கம் இருக்கும் .அப்படித் தூக்கமில்லாத நாட்கள் எல்லாம் இருந்திருக்கின்றன. நான் ஆசைப்பட்டது போலப் பல ஊர்களுக்கு திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது ஹவுஸ்புல் காட்சிகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆசைப்பட்டு இருக்கிறோம். அது இப்போது நடக்கிறது என்கிறபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது .மிக்க நன்றி.
இயக்குநர் பாலாஜி பேசும்போது, “இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். இப்போதும் அந்த அறுபது -எழுபது சதவீத படத்தை எடுத்து விட்டுத் தூக்கிப் போட்டது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. இந்தப் படம் வருவதற்கு இந்தத் தயாரிப்பாளர்கள் இருவர் முக்கியமானவர்கள். சகோதரர் ஷரண், கோபால் சார் இவர்கள் முக்கியமானவர்கள். அதையும் தாண்டி என் மனைவி, என் சகோதரர், குடும்பத்தினர், நண்பர்கள் என் என் குழுவினர் உட்பட பலரும் பெரிய பக்க பலமாக இருந்தார்கள். அதையும் தாண்டி பலரும் எனக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு எனது குழுவினர் எனக்குப் பெரிய பலமாக இருந்தார்கள். வேல ராமமூர்த்தி சார், ஜெயக்குமார் சார் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். சிந்து, ரித்விகா மேம், தர்ஷிகா மேம் நீண்ட நாட்கள் என்னுடன் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் 18 மணி நேரம் கூட வேலை செய்திருக்கிறார்கள். சித்து என்னுடனே மினி டூர் போல வந்து கொண்டே இருந்தார்.
என்னுடைய ஒளிப்பதிவாளர் மணிகண்டன், அவருக்கு பெரிய நன்றி.என் முதல் படத்திற்கும் எனது அடுத்த படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு வரும்,ஆனால் எதையும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளலாம். சண்டை போட்டாலும் உடனே மறந்துவிட்டு டீ சாப்பிடக் கூப்பிட்டால் வருவார். அப்படிப்பட்டவர்தான் எடிட்டர் ராஜா ஆறுமுகமும். ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டதை ஏற்கெனவே ஒரு நடிகரை வைத்து எடுத்த படத்தில் தேவையற்றதைத் தூக்கி விட்டுத் தேவையானதை எடுத்து மீண்டும் எடுக்கப்பட்டதோடு சேர்த்துக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது சுலபமானது கிடையாது.அவர் செய்தார். அவருக்கு நன்றி.
மூன்றாவது நபராக வந்து எனது குடும்பத்தில் ஒருவராக மாறி இருக்கிறார் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி.இந்தப் படம் வந்தால் மூன்று பேருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நான் அப்போதே சொன்னேன். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் அதற்குப் பிறகுதான் இயக்குநர் யார் என்று கேட்பார்கள் என்று சொன்னேன். அதுதான் இன்று நடந்திருக்கிறது. சக்தி பாலாஜியின் இசையைப் பற்றிப் பலரும் பேசும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருக்கிறது.என் இதயத்திலிருந்து சொல்கிறேன் அவர் பெரிய ஆளாக வருவார்.

