முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்துள்ளது.********

சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினை ஒன்றை அழுத்தமாகப் பேசும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் இருக்கும் உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளதுடன், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பாளராக செல்வா RK, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். கலை இயக்கத்தை ராமு தங்கராஜும், சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயனும் கவனிக்கின்றனர்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பில் வேகம் காட்டி வரும் ‘மாகாளி’, தற்போது பரபரப்பாகத் தயாராகி வருகிறது.