ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, அப்படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் தெரிவித்திருப்பதாவது: “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு முதலில் நன்றி. ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் எனக்கு மிகப்பெரிய பலம். அந்த வரிசையில் ‘அன்பில் அவன்’ படத்தையும் பார்க்கிறேன். காதல் கதையாகத் தொடங்கி, த்ரில்லர், ஆக்ஷன் எனப் பல ஜானர்களில் பயணிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்துப் பலர் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இதன் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்.**********
படம் வெளியானது முதல் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் வெளியானாலும், படம் தொடர்ந்து வளர்ந்து தற்போது லாபகரமான நிலையை எட்டியிருக்கிறது. இன்னும் பலர் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்களின் விமர்சனங்களை மட்டும் நம்பாமல், படத்தைப் பார்த்து உங்களுடைய கருத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் படம் பின்னாளில் இன்னும் அதிகமாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

