தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர். மகேஷ் குமார் அகர்வால் சென்னையில் மெரினா கடற்கரைச் சேவைச் சாலையில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் எட்டு இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் எட்டு உதவி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்கின்றனர். இக்குழுவிற்கு, ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் உதவி கமாண்டன்ட் கே. செல்வதுரை, தலைமை தாங்கினார். புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டலப் பிரிவைச் சேர்ந்த குழுவினரும் இப்பேரணியில் இணைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து புறப்படும் இந்தப் பேரணிக் குழுவினர், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் வழியாக, பல முக்கிய நகரங்களைக் கடந்து, சுமார் 1,810 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு குஜராத் மாநிலம் ஏக்தா நகரைச் சென்றடைய உள்ளனர். இந்தப் பேரணி 2026 அக்டோபர் 27-ஆம் தேதி இலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு, அக்டோபர் 31, 2026 அன்று நடைபெறவுள்ள ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தின) கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிற மாநிலங்களைச் சேர்ந்த குழுவினரும் இணைய உள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல்துறை மாநிலம் முழுவதும் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டில், பல்வேறு வழக்குகளில் சுமார் 23,000 கிலோகிராம் கஞ்சாவும், 10 லட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குக் கஞ்சா கடத்தப்படுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புக் குழு ஒடிசா மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உள்ளூர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று, இவ்விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

