“சத்தியவான் சாவித்ரி” திரைப்பட விமர்சனம்

வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேலி தயாரிப்பில், பர்வீன் எஸ்.விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், ஷாருகேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடோ சாகா ஆகியோரின் நடிப்பில்

வெளிவந்திருக்கும் படம் “சத்தியவான் சாவித்ரி” . தோல்வியே கண்டிராத வழக்கறிஞரான மிஷ்கினிடம் உதவி வழக்கறிஞராக சேர்கிறார் கீர்த்தி சிரேஷ். ஒரு நிரபராதிக்கு எதிராக மிஷ்கின் வாதாடுகிறார். இது கீர்த்தி சுரேஷ்க்கு பிடிக்கவில்லை. அதனால் அந்த நிரபராதிக்கு ஆதரவாக வாதாடி அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து வெற்றியும் பெறுகிறார் கீர்த்தி சுரேஷ். பிறகு ஒருகட்டத்தில் கீர்த்தி சுரேஷின் கணவர்மீது ஒரு பெண்ணின் கொலைப்பழி விழுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. கீர்த்தி சுரேஷின் கணவருக்கு எதிராக அரசுதரப்பு வழக்கறிஞராக மிஷ்கின் வாதாடுகிறார். கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் வாதாடுகிறார். இதில் வெற்றி பெற்றது யார்?. அந்த பெண்ணை யார் கொலை செய்தது? என்பதே மீதிக் கதை.

படத்தின் பெறும்பகுதி நீதிமன்றக் காட்சிகளாகவே திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. மிஷ்கின் – கீர்த்தி சுரேஷின் வாத பிரதிவாதங்கள் பார்வையாளர்களை மிகவும் ஈர்க்கின்றன. அடுத்தடுத்து வரும் காட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கின்றது. இதில் கிர்த்தி சுரேஷ் அபார ஆற்றலுடன் நடித்துள்ளார். கணவர் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து அதிர்ச்சி அடையும் கட்டத்திலும், அதே நேரத்தில் கொலைப் பழியிலிருந்து கணவரை காப்பாற்றுகின்ற வாதத்திலும் கீர்த்தி சுரேஷ் பார்வையாளர்களின் கைத்தட்டலை பெறுகிறார். மிஷ்கினுக்கு இணையாக நீதிமன்றத்தில் அவர் எதிர்கொள்ளும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகின்றன. மிஷ்கின் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யமாக மாற்றுகிறார். ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞருக்கே உரிய கம்பீரம், தோல்வியால் ஏற்படும் ஈகோ, பழிவாங்கும் மனநிலை என உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கீர்த்தி சுரேஷுடன் அவர் மோதும் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக அமைந்துள்ளன. இருவருக்கும் இடையிலான நடிப்புப் போட்டி திரைக்கதைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் இருவரும் நீதிமன்றத்தில் வாதாடும் காட்சியில், வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வீரப்பா பேசும் வசனமான “சபாஷ் சரியான போட்டி” என்று நம்மை சொல்லவைக்கிறது. கீர்த்தி சுரேஷின் உதவியாளராகவும் நண்பராகவும் வரும் பாலசரவணன், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு இடையே நகைச்சுவையை அழகாகக் கலந்து கொடுக்கிறார். பல இடங்களில் தனது இயல்பான நகைச்சுவையால் சிரிக்க வைப்பதுடன், உணர்வுபூர்வமான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். இயக்குநர் பிரவீன் எஸ். விஜய், இது தனது முதல் திரைப்படம் என்பதை மறக்கடிக்கும் வகையில் கதையைத் தேர்வு செய்திருப்பதுடன், அதற்கேற்ற விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்திருக்கிறார். ஒரு நீதிமன்றக் கதையை வெறும் வாதப் பிரதிவாதங்களுடன் நிறுத்திவிடாமல், அதற்குள் சஸ்பென்ஸ், திருப்பங்கள், உணர்ச்சிகள், நகைச்சுவை எனப் பல அம்சங்களைச் சரியான விகிதத்தில் இணைத்திருப்பது அவரது இயக்கத் திறமைக்குச் சான்றளிக்கிறது. படத்திற்கு மற்றொமொரு பக்கபலமாக கைகொடுத்திருப்பது சாம் சி.எஸ். இசைதான். நீதிமன்ற மோதல் காட்சிகளில் அவரின் பின்னணி இசை பின்னி பிடலை எடுத்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் கட்டிலைக் கலையை அழகாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். நீதிமன்ற விவாதங்களை நேரில் பார்ப்பதுபோல் அவரின் ஒளிப்பதிவு உயிரோட்டமாக இருக்கிறது.

மொத்தத்தில் எமனிடமிருந்து கணவன் சத்தியவானை சாவித்ரி காப்பாற்றியது புராணக்கதை. சக்களத்தியிடமிருந்து கணவனை மீட்பது நவீன காலத்து சாவித்ரியின் கதை.