திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அசசி கிரியேசன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசியதாவது: “கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக நானும் இயக்குநர் நானியும் கடுமையாக உழைத்திருக்கிறோம். சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்தில் ஏராளமான தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம். பல நிராகரிப்புகளையும் தோல்விகளையும் எதிர்கொண்டோம். ஆனால் ஒவ்வொரு முறையும் நானும் அவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தோம். இந்தப் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். இயக்குநர் நானியின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.********
இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடிட்டர் வசந்த், நடன இயக்குநர் மனோஜ், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு, இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி என அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். உதயா மற்றும் துஷ்யந்த் ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்தில் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக துஷ்யந்த் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். பிரிகிடா இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வு. குறும்படங்களில் இருந்தே அவரைத் தெரியும் அவருடன் நாயகனாக சேர்ந்து நடிப்பேன் என நினைத்ததில்லை. ராதிகா மேடத்துடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். எங்கள் படத்தை நம்பித் தயாரித்த மாதேஸ்வரன் அண்ணன் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நான் குறும்படங்களில் நடித்து, பல்வேறு முயற்சிகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகுதான் திரைத்துறைக்கு வந்தேன். திரைத்துறைக்கு வந்த பிறகுதான் எனது தந்தையின் பெயரான லியோனியின் பெயரும் என்னுடன் இணைந்தது. எனவே, என்னை எனது தந்தையின் அடையாளத்தின் வழியாகப் பார்க்காமல், தனித்துவமான கலைஞனாகப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்ததில் தவறு இருந்தாலும் விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதேபோல் நல்ல விஷயங்கள் இருந்தால் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து ‘டெலிவரி பாய்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
இயக்குநர் நானி பேசியதாவது, எனது நீண்ட நாள் கனவான இயக்குநர் பயணம் ‘டெலிவரி பாய்’ படத்தின் மூலம் நனவாகியுள்ளது. இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக இருந்த பெற்றோர், குடும்பத்தினர், அக்கா பரணி மற்றும் மனைவி ராதிகா ஆகியோருக்கு நன்றி. இயக்குநர் சுசீந்திரன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும், அவர் என்மீது வைத்த நம்பிக்கையும் எனது வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லியோ சிவக்குமாரைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னேன். அவர் கதையை விரும்பி ஏற்றுக்கொண்டார். பல ஆண்டுகளாகப் பல போராட்டங்களையும் தயாரிப்பாளர் தேடும் சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். எங்களை நம்பி ஆதரவளித்த மாதேஸ்வரன் அண்ணன் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. அவருக்கு எங்கள் படக்குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

