ரூ.3.78 கோடி கல்விக் கடன் வழங்கிய அமைச்சர் த.சரத்குமார்

மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள், கல்விக்கடன் முகாமில் 40 மாணவர்களுக்கு ரூ.3.78 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்விக் கடன் முகாம் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கல்வி கடன் முகாமில் 40 மாணவர்களுக்கு இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா,  ஸ்டேட் பேங்க் ஆப், இந்தியா, பேங்க் ஆப் பரோடா,  காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சார்பில் 3,78,13,518 மதிப்பீட்டில் கல்வி கடனுதவிகளுக்கான ஆணைகளை அமைச்சர் திரு.சரத்கும்மர் அவர்கள் வழங்கினார்.

பின்னர், அனைத்து வங்கிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கல்வி கடனுதவிக்கான முகாம்களை பார்வையிட்ட மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை வங்கிகள் வழங்கி கல்வி கடனுதவிகள் கிடைத்திட வழிவகை செய்திட வங்கிகளின் மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்   பொருளாதார சூழ்நிலையால் எந்தவொரு தகுதியான மாணவருக்கும் உயர்கல்வி தடைபட கூடாது என்ற மைய கருத்தை கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் வெளிப்படைத் தன்மையுடன் கல்விக் கடன்கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விகற்பதற்கு ஏதுவாக மாபெரும் கல்வி கடன் முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.   அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட  நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் மாபெரும் கல்விக்கடன் முகாம் இன்று வண்டலூர் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வசதிக்காக அனைத்து வங்கிகளும் தனித்தனியாக அரங்குகளை அமைத்து கல்வி கடன் தகுதிகள், வட்டி விகிதங்கள், பிணையில்லா கடன் வசதிகள், பிரதம மந்திரி வித்யாலஷ்மி இணையதளத்தில் கல்வி கடன் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி கல்வி கடன் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், இதுவரை அனைத்து வங்கிகள் மூலமாக ரூ.212.55 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.மு.வீரப்பன்,இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சௌ.தியாகராஜன் (செங்கல்பட்டு),  திருமதி.ஜெ.காமாட்சி (பல்லாவரம்), திட்ட இயக்குநர் (மா.ஊ.மு) திருமதி.க.ஸ்ருதி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.எஸ்.ரேணுகா, காஞ்சிபுரம் மண்டலம் துணை மண்டல மேலாளர் (இந்தியன் வங்கி) திருமதி.வை.சாரதா, துணைவேந்தர் (BSACIST) முனைவர்.ஏ.பீர் முகம்மது, பதிவாளர் முனைவர்.N.ராஜா ஹுசைன், இரா.வே.அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ம.சண்முகவள்ளி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.