“இதயம் முரளி” படத்தின் மூலம் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் – அதர்வா முரளி

“இதயம் முரளி” திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படக் குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி அறிவிக்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்பிழாவில் நடிகர் அதர்வா முரளி பேசியதாவது: “உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியில் நிற்பது போன்ற உணர்வுதான் இப்போது எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படக்குழுவுடன் ஒரு அழகான பயணத்தை பகிர்ந்திருக்கிறோம். ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை அப்போது முதன்முதலாக ஒரு இயக்குநராகவே சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலேயே இந்தப் படத்தின் தலைப்பு, தோற்றம், உணர்வு என அனைத்தையும் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். இன்று அந்தக் கனவை நாங்கள் நினைத்தபடியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.! இந்தப் படத்தின் மூலம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நண்பர்கள் குழு கிடைத்தது. டிராவிட், சுதாகர், ரக்ஷன், ஏஞ்சலின், கயாது, ப்ரீத்தி, நிஹாரிகா என அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் தனியாக ஒரு ‘பாய்ஸ் குரூப்’ கூட உருவானது. சில நேரங்களில் அவர்களுக்கு படப்பிடிப்பே இருக்காது. இருந்தாலும் செட்டுக்கு வந்துவிடுவார்கள். ரக்ஷனிடம் ஒருநாள், ‘இன்று உங்களுக்கு காட்சி இல்லையே?’ என்று கேட்டபோது, ‘லஞ்ச் சாப்பிடத்தான் வந்தேன்’ என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்தப் படப்பிடிப்பு தளம் அனைவருக்கும் சொந்த வீட்டைப் போல மாறிவிட்டது.******

பல படங்களில் இப்படிப்பட்ட சூழல் அமைவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தினமும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவோம். ஆரம்பத்தில் அது ஒரு கட்டாயம் போலத் தோன்றினாலும், போகப் போக அது ஒரு குடும்ப உணர்வாக மாறிவிட்டது. திரையில் தெரியும் அந்த நட்புக்கு காரணம், படப்பிடிப்பு தளத்தில் நடந்த அந்தச் சிறிய சிறிய தருணங்கள்தான். இந்தப் படம் எனக்கு பல அழகான நினைவுகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

முதலில் இந்தத் தலைப்பை கேட்டபோது, ‘இது சரியாக அமையுமா?’ என்று ஆகாஷிடம் நான் பலமுறை கேட்டேன். ஏனெனில் ‘இதயம்’ என்றால் அனைவருக்கும் ஒரு ஆழமான காதல் கதைதான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் ஒரு இலகுவான காதல் கதையைச் சொல்கிறோம். அது பொருந்துமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் ஆகாஷ் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னார். ‘என்னை நம்புங்கள் பிரதர்… இது நல்ல படமாக வரும்’ என்றார். இன்று அவர் சொன்னதை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்ததால்தான் எங்களுடைய கனவு நனவாகியுள்ளது. இந்தத் தலைப்பின் மூலம் என் அப்பா முரளிக்கு ஒரு சிறிய மரியாதை செலுத்த வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு நண்பராக ஆகாஷ் அதை மிகவும் அழகாக செய்து காட்டியிருக்கிறார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, இயக்குநராக தனது கனவுக்காக எண்ணற்ற தூக்கமில்லா இரவுகளையும், பல சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இன்று அந்த முயற்சி வெற்றிபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது.. “அதர்வா சார் முதல் நாளிலிருந்தே இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நண்பராகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சார் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் முழு ஆதரவாக இருந்தார். இவ்வளவு பெரிய படங்களில் பணியாற்றியிருந்தாலும், எங்கள் சிறிய படத்திற்கும் அதே அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.