யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம்

9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி பாபு இது வரை இல்லாத வகையில் 11 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில்  நடிக்கிறார்.  இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படத்தில்  நடிகை அதிதி ரவி நாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு,  ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “பரபரப்பான நகைச்சுவை படமான இப்படத்தில்  நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார். மிகவும் சவாலான இப்பணிக்காக கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார்,” என்றார். ******

படத்தின் கதை குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குகிறது, அதன் பிளாக் பாக்ஸை தேடும் பயணம் தான் இந்த திரைப்படத்தின் கதை. விபத்தின் காரணத்தை கண்டறிய செல்லும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை, ஆக்ஷன் கலந்து மிகவும் விறுவிறுப்பாக கூறவுள்ளோம்,” என்றார். 9 லைட்ஸ் பேனரில் சுரேஷ் முத்து பிரம்மாண்ட தயாரிப்பில், ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் காமெடி ஆக்ஷன் திரில்லரின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்கிறது.