ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள விளையாட்டு பின்னணியிலான திரைப்படமான ‘மண்டாடி’, திரையரங்குகளில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். தனித்துவமான கதை உலகம், பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்ட பின்னணி மற்றும் சூரியின் இதுவரை பார்த்திராத தோற்றம் ஆகியவற்றால் ‘மண்டாடி’ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. ‘மண்டாடி’ படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று, இப்படத்திற்காக சூரி மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க உடல் மாற்றம். இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வகையில், தீவிரமான மற்றும் உடல் ரீதியாக சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். அவரது நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை இப்படம் ரசிகர்களுக்கு வழங்க உள்ளது.**********
கதாபாத்திரத்திற்கு முழுமையான நம்பகத்தன்மையை கொண்டுவரும் வகையில், சூரி கடுமையான உடற்பயிற்சி மற்றும் விரிவான கடல் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், டூப் ஆர்டிஸ்ட்கள் எவரையும் பயன்படுத்தாமல், கடலில் படமாக்கப்பட்ட சவாலான சண்டைக் காட்சிகளிலும் அவரே நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் மேற்கொண்ட தயாரிப்பு மற்றும் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது. படத்தின் புரமோக்களில் இடம்பெற்றுள்ள சூரியின் முற்றிலும் மாறிய உடலமைப்பு, கம்பீரமான திரைத் தோற்றம் மற்றும் ஆற்றல்மிக்க நடிப்பு ஆகியவை ஏற்கனவே ரசிகர்களிடம் பாராட்டையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

