ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் காணொளி வெளியானது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஜி.டி.என்’. இந்தத் திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆர். மாதவன் உடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.*********
ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர், அதைவிட மிக முக்கியமாக தேசபக்தி கொண்டவர். பல துறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆனால், அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இந்த திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது” என்றார்.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன், ஜி.டி. ராஜ்குமார், மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்டனர்.

