கில்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், “ஹபீபி” படத்திற்கு பாராட்டு விழா

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கில்ட்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விலாவில் பத்திரிகையாளரும் இயக்குநருமான கோடங்கி பேசியதாவது: “இது ஆடம்பரமான விழா இல்லை; ஆனால் அற்புதமான, அழகான விழா. ‘ஹபீபி’ போன்ற படைப்புகளை நாம் எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மீரா கதிரவன் சொல்லியிருப்பது அன்பு. அன்புக்கு மதம் கிடையாது, ஜாதி கிடையாது, மொழி கிடையாது. ஆனால் அந்த அன்பு வெற்றி பெறுவதற்குப் பல நேரங்களில் அதிகமான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. இந்தப் படத்தை நான் இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் நோக்கத்தையும் உழைப்பையும் உணர முடிகிறது.*********

“ஒரு படத்தைத் தயாரிப்பவர், இயக்குநர், நடிகர்கள் ஆகியோர் நல்ல படைப்பைக் கொடுப்பதற்காக எவ்வளவு போராடுகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். நானும் பத்திரிகையாளராக 30 ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறேன்; படங்களைத் தயாரித்தும் இயக்கியும் இருக்கிறேன். ஒரு படம் பாதியில் நின்றுவிட்டால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வலியும், ஒரு நல்ல படைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க இயக்குநர் படும் வேதனையும் எனக்குத் தெரியும். இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இயக்குநரின் பார்வையைப் புரிந்துகொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

“தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறு முதலீட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. பல தயாரிப்பாளர்கள் காணாமல் போகிறார்கள்; பல இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இத்தகைய சூழலில் நல்ல படைப்புகளை உருவாக்குபவர்களை அவர்கள் இருக்கும்போதே பாராட்ட வேண்டும். நல்ல திரைப்படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தால்தான் தொடர்ந்து இதுபோன்ற படங்களை உருவாக்கும் உற்சாகம் அவர்களுக்குக் கிடைக்கும். கமர்ஷியல் வெற்றி முக்கியம்தான்; அதே நேரத்தில் உணர்வுபூர்வமான, அழகான படைப்புகளையும் நாம் கொண்டாட வேண்டும்.

“இஸ்லாமியர்களைப் பற்றிய கதையாக இருப்பதால் மட்டும் ஒரு திரைப்படத்தை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இந்து மதம், கிறிஸ்தவ மதம் சார்ந்து பல திரைப்படங்கள் வருகின்றன. இஸ்லாமியர்களின் வாழ்க்கையைப் பேசும் படங்களுக்கும் அதே அளவிலான கவனமும் ஆதரவும் கிடைக்க வேண்டும். ‘ஹபீபி’ போன்ற திரைப்படங்களைத் திரையுலகினர் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். இந்தப் படத்தில் உழைத்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.