*காளிதாஸ் 2′ திரைப்படம் ஏப்.10 ல் வெளியீடு

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வினில்.., நடிகர் பரத் பேசியதாவது: ‘காளிதாஸ்’ 2019-ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.********

இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,  இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.