ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். *******
இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் வழங்குகின்றன. ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், “சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை கேட்க முடியாதா…! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்- நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

