ஊடகத்தினர் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, மனைவியை பிரசவத்துக்கு அனுப்பிவிட்டு வெளியே பதற்றத்துடன் காத்திருப்பதுபோல் இருக்கும் – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!* விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும்.
நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும். மகிழ்ச்சியாக வருவோம். கொண்டாட்டத்துடன் வருவோம். நீங்கள் நின்று, பாராட்டி, கை கொடுத்து, கட்டிப் பிடித்து, நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.*******

உங்களுக்குப் பிடித்து விட்டால் போதும், தூக்கிக் கொண்டு செல்வீர்கள். அது பற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும், அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள். அனைத்து சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள். அப்படி அதை நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது, நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.

இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.

சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் சார், அமிதாப் சார், மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன். தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும். இங்கு நிறைய நபர்களை அடிப்பது, இந்தக் கூட்டமாக இருப்பது, இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை. ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை. ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன். லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. என் சகோதரர்கள் ஹரி, ஜோதி, விஷ்ணு, பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார். இப்படி அனைவரும் இந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.