*ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ திரைப்படம் ஜூன் 25ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், ”இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, ‘என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?’ எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி. நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.*******
‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள். இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த ‘அந்தரன்’ வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.
‘போர் தொழில்’, ‘ராட்சசன்’, ‘தெகிடி’ ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.
இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்,” என்றார்.

